ஒருசமயம் அரசன் ஒருவன் இங்கு வந்தபோது வளர்ந்திருந்த நெற்பயிர்களை எடுக்க முனைந்தான். அப்போது ஒரு சிறுவன் அதை தான் பாதுகாத்து வருவதாகவும், பறிக்க அனுமதி இல்லை என்று கூற, அரசன் சிறுவனைப் பிடிக்க முனைந்தான். சிறுவன் வான் நோக்கி சென்று மேலே மறைய, அரசன் வந்தது பெருமாளே என்று உணர்ந்து பிரார்த்தித்துக் கொள்ள, பகவான் மேகத்தில் இருந்து வெளிப்பட்டு காட்சி அளித்ததால் இத்தலத்து மூலவருக்கு 'நீலமேகப் பெருமாள்' என்ற திருநாமம் உண்டானது.
ரங்கபட்டர் என்னும் அர்ச்சகர், பெருமாளுக்கு கேசம் வளர்ந்திருப்பதாகச் சொல்ல, சோழ அரசன் அதைக் காண வந்தபோது, பெருமாள் தமது திருமுடியில் குழற்கற்றையை வளர்த்து அருளிய தலமாதலால் இத்தலத்து உத்ஸவர் 'சௌரிராஜன்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'நீலமேகப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். அபய ஹஸ்தத்திற்கு பதிலாக பெருமாள் வரத ஹஸ்தராக காட்சி, ப்ரயோக சக்கரம். உத்ஸவர் திருநாமம் 'சௌரிராஜப் பெருமாள்'. தாயார் 'கண்ணபுர நாயகி' என்று வணங்கப்படுகின்றார். கண்வ முனிவர், கருடன், தண்டக மகரிஷி ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
விபீஷண ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் அருளியபடி அமாவாசையன்று பெருமாள் நடை அழகை ஸேவை ஸாதித்த ஸ்தலம். திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம். மகரிஷிகள் வேண்டியபடி வீகடாக்ஷன் என்ற அசுரனை வதம் செய்ய பெருமாள் சக்ர பிரயோகம் செய்வதாக ஸேவை சாதிக்கிறார்.
முனையதரையர் என்ற பக்தர், தமது மனைவி சமைத்த பொங்கலை அர்த்தசாம பூஜைக்குச் சமர்ப்பிப்பார். ஒருசமயம் கோயிலுக்கு போக முடியாமையால் பக்தியுடன் பகவானுக்கு சமர்ப்பிக்க, மூடிய கோயிலுக்குள் மணி ஓசை கேட்டு வெண்பொங்கல் நைவேத்திய வாசனை நிரம்பியது. அதுமுதல் அர்த்தஜாம பூஜைக்கு 'முனியோதரம் பொங்கல்' நிவேதனம் செய்யப்படுகிறது.
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று. திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கவித்தலம், திருக்கோவிலூர் பிற க்ஷேத்திரங்கள்.
திருமங்கையாழ்வார் 104 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும், குலசேகராழ்வார் 11 பாசுரங்களும், பெரியாழ்வார் ஒரு பாசுரமும், ஆண்டாள் ஒரு பாசுரமுமாக மொத்தம் 128 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|